Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்ந்து கிழக்கு கரையோரமாக நகர்ந்து எதிர்வரும் 28ம் திகதி மட்டக்களப்புக்கு மிக அண்மையாகவும், 29ம் திகதி திருகோணமலைக்கு அண்மையாகவும், பின்னர் முல்லைத்தீவுக்கு அண்மையாகவும் நிலை கொள்ளும் வாய்ப்புள்ளது.
இது நாளை (27.11.2025) அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று எதிர்வரும் 29.11.2025 அல்லது 30.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மலாக்கா நீரிணைக்கு அருகில் தொன்றியுள்ள புயலுக்கு சென்யார் எனப் பெயரிடப்பட்டுள்ளமையால், இந்த தாழமுக்கம் புயலானால் அதற்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டித்வா( Ditwah)- இயற்கையால் அமைந்த ஏரி- எனப் பெயரிடப்படும்.
இந்த தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக மழை பெற்று வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் இந்த மழை எதிர்வரும் 30.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை முதல் கிழக்கு மாகாணத்தில் மிகக் கனமழை கிடைக்க தொடங்கும். கிழக்கு மாகாணத்திற்கு 27,28,29 ம் திகதிகள் மிக முக்கியமான நாட்களாகும்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று மழை கிடைத்துள்ளது.
இன்று இரவு முதல் வடக்கு மாகாணத்தில் மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். வடக்கு மாகாணத்தில் 28 ,29, 30 ம் திகதிகளில் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மிக வேகமான காற்று வீசுகை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இது எதிர்வரும் 30ம் திகதி வரை தொடரும்.
வடக்கு மாகாணத்தில் தற்போது வீசத் தொடங்கியுள்ளது. இது எதிர்வரும் 01.12.2025 வரை தொடரும்.
கிழக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. ஆறுகள் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளன. பல இடங்களில் வெள்ள நிகழ்வுகள் பதிவாக தொடங்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் மூன்று நாட்களும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப்பகுதி மற்றும் வெள்ள அனர்த்த வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். மிக வேகமான காற்றோடு மழை கிடைக்கும் என்பதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது.
கிழக்கு மாகாண மக்கள் தயவு செய்து உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 28 தொடக்கம் மிகக் கனமழை கிடைக்க தொடங்கும். ஏற்கெனவே வடக்கு மாகாணத்தில் சில சிறிய குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. கடநீரேரிகள் நீர் நிறைந்து முகத்துவாரங்கள் வெட்டி விடப்பட்டுள்ளன. ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்வரும் 28,29ம் திகதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மிக வேகமான காற்று வீசுகையும் மிகக் கன மழையும் கிடைக்கும் என்பதனால் வடக்கு மாகாண மக்கள் இந்நாட்களில் மிக அவதானமாக இருப்பது சிறந்தது.
அதேவேளை மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் எதிர்வரும் 29.11.2025 வரை கனமழை தொடரும் வாய்ப்புள்ளது. இதனோடு இணைந்த நிலச்சரிவு நிகழ்வுகளும் ஏற்படும் வாயப்புள்ளது. இப்பிரதேசங்களின் பல நதிகள் ஏற்கெனவே தமது கொள்ளளவைத் தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றன. பல பிரதேசங்களில் வெள்ள நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. எனவே இப்பகுதி மக்களும் அடுத்த மூன்று தினங்களுக்கும் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
இந்த முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் மக்களை அச்சமூட்டுவதற்கானவை அல்ல. மாறாக மக்களை விழிப்பூட்டவும், தயார்ப்படுத்தவுமே. தமிழில் ஒரு பழமொழி உண்டு. ” சிறிய பாம்பானாலும் பெரிய தடி கொண்டு அடிக்க வேண்டும்”. அது போன்றே காலநிலை சார் அனர்த்தங்களை போதுமான தயார்ப்படுத்தல் மூலம் இலகுவாக வெற்றி கொள்ளலாம். ஆகவே நாம் விழிப்படைந்து எம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
குறிப்பு: தற்போதைய நிலையில் மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகின்றது. இதில் மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.