Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

50 மாணவர்களுக்கு குறைவாக காணப்படும் பாடசாலைகளை மூடிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், தோட்டங்களில் இருக்கும் மாணவர்கள் பாடசாலை கல்வியை விட்டு, தேயிலை பறிக்க செல்லும் நிலை ஏற்படும். அதனால் தோட்டங்களில் பாடசாலைகளை மூடுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் இலவச கல்வி அறிமுகப்பட்டு 30 வருடங்களுக்கு பின்னரே தோட்டங்களில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளையர்கள் தோட்டங்களில் பாடசாலைகளை ஏற்படுத்த தவறியதாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தோட்டப்பாடாலைகளுக்கு விசேட கவனம் செலுத்தி, நாட்டின் ஏனைய பாடசாலைகளின் தரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் மொத்தமாக 10ஆயிரத்தி 76 பாடசாலைகள் இருக்கின்றன. அதில் 9730 மாகாண பாடசாலைகள், 396 தேசிய பாடசாலைகள் இருப்பதுடன் 864 தோட்ட பாடசாலைகள் இருக்கின்றன. இந்த 864 தோட்ட பாடசாலைகளில் நூறுக்கும் குறைவான பாடசாலைகளிலே உயர்கல்வி கற்பிக்கப்படும் பாடசாலைகள் இருக்கின்றன.
அதனால் உயர்கல்வி பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமே ஆசிரியர்கள் உருவாக்கிக்கொள்ள முடியுமாகும்.மலையக பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்துவருவதன் காரணமாகவே ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அதனால் தொடர்ந்தும் மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க, உதவி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டப்பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிக்க எமது காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அதற்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. வடக்கில் இருந்து ஆசிரியர்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடு்த்தபோதும் அது சாத்தியமாகவில்லை. அப்போதுதான் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை கொண்டுவரப்போவதாக தெரிவித்து, பெரிய சர்ச்சை ஏற்பட்டது, இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை கொண்டுவருமாறு நாங்கள் தெரிவிக்கவில்லை.எவ்வாறாவது இந்த ஆசிரியர்களை எடுத்துக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால், இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சியளிக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்வரும் காலங்களில் இன்னும் பிரச்சினையாக இடமிருக்கிறது.
மேலும் பெருந்தோட்டங்களில் 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.தோட்டங்களில் 7, 8 கிலோ மீட்டருக்கு ஒரு பாடசாலையே இருக்கிறது. அதனை மூடிவிட்டால், மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல், தேயிலை பறிக்கவே செல்வார்கள். அதனால் தோட்டங்களில் இருக்கும் குறைந்த மாணவர்கள் இருக்கும் பாடசாலைகளை மூடிவிட ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அதேபோன்று மாணவர்களின் இடை விலகலை பாரக்கும்போதும் தோட்ட பிரதேசங்கள் இருக்கும் மாவட்டங்களிலே அதிகமான மாணவர்களின் இடை விலகல் பதிவாகி இருக்கிறது. தோட்டப்புற பெற்றொர்களுக்கு கல்விக்கு செலவிட போதுமான பொருளாதார வசதி இல்லாமையே இதற்கு காரணமாகும் என்றார்.